அமெரிக்காவில் காயமடைந்து மருத்துவமனையில் உள்ள குழந்தையை சந்திக்க, இந்திய பெற்றோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் தேபஷிஸ் சாஹா. இவர் குடும்பத்துடன் அமெரிக்காவில் தங்கி பணிபுரிந்து வருகிறார். அவர்களின் 11 மாத குழந்தை தூங்கும்போது படுக்கையிலிருந்து கீழே விழுந்ததால் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தைக்கு காயம் ஏற்படும் வகையில் பெற்றோர் அஜாக்கிரதையாக இருந்ததாக நியூஜெர்சியைச் சேர்ந்த அமெரிக்க குழந்தைகள் நலன் துறை அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமை,
நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சாஹாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், குழந்தையை பார்க்க பெற்றோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதுகுறித்து சாஹா கூறுகையில், ‘மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வரும் அளவுக்கு குழந்தை இப்போது நலமாக இருக்கிறது. குழந்தையை எங்கள் பெற்றோ ரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால், குழந்தையை பார்க்கவே எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. குழந்தையை மீட்க உதவ வேண்டும் என்று இந்திய தூதரகத்திடம் கோரியுள்ளோம்’ என்றார். குழந்தையை மீட்கும் நடவடிக்கைகளை இந்திய தூதரகம் மேற்கோண்டுள்ளது.