உங்கள் பெண்கள் காதல் வயப்பட்டால் அவர்களை அடிப்பது, திட்டுவது, வெளியில் செல்ல விடாமல் வீட்டில் அடைத்து வைப்பது, வீட்டில் இருக்கும் யாரும் அவருடன் பேசாமல் தனிமைப்படுத்துவது, போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இவ்வாறு செய்வதால் அவர்கள் தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுக்கத்தூண்டும்.
அவர்களுக்கு புத்திமதி கூறுங்கள். புத்திமதி எடுபடவில்லை எனில் சிறந்த மனோதத்துவ நிபுணரிடம் அவர்களை அழைத்துச் செல்லலாம். அவர்களின் நெருங்கிய நண்பர், பிடித்த உறவினர் மூலம் நல்ல விஷயங்களை எடுத்துக் கூறி புரிய வைக்கலாம்.
காதல் வாழ்க்கையால் எதிர்காலத்தை இழந்து தவிப்பவர்களைப் பற்றி எடுத்துக்கூறி நடைமுறை வாழ்க்கை என்ன என்பதை புரிய வைக்கலாம். அவர்கள் விரும்பும் இடங்கள், நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தலாம். மகள் காதலிப்பது தெரிந்துவிட்டால் கண்கொத்திப் பாம்பாக பின்தொடர்ந்து நிழல்போல் கண்காணிக்க கூடாது.
எக்காரணம் கொண்டும் காதல் வயப்பட்ட தங்கள் குழந்தையை தனிமைப்படுத்தவோ, சந்தேக கண்ணோட்டத்திலோ பார்க்கக் கூடாது. வழக்கமான அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் வீட்டில் தான் தனிமைப்படுத்தபடவில்லை என்கிற நம்பிக்கை அவர்களிடம் தெளிவை ஏற்படுத்திவிடும். அப்புறம் அவர்களாகவே யோசித்து நல்ல முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் எதிர்ப்பு அதிகமானால்தான் அதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.
எனவே குழந்தைகளுக்கு தகுந்த ஆலோசனையும், அரவணைப்பும் இருந்தால் அவர்கள் தடம் மாறிப்போக வாய்ப்பில்லை என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.