2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் அப்போதைய நிதி அமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரத்தைச் சேர்க்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கு பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ப. சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும், அவருக்கு எதிராக மூத்த சி.பி.ஐ. அதிகாரிகள் உள்ளிட்ட சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஆ. ராசாவுக்கும் சிதம்பரத்துக்கும் இடையே எழுதப்பட்ட கடிதங்கள், பரிமாறப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை நீதிமன்ற உத்தரவுப்படி சுப்பிரமணியன் சுவாமிக்கு சி.பி.ஐ. வழங்கியது.
இந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்றபோது, சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி, 100 பக்கங்கள் கொண்ட ஆதாரங்களை நீதிபதியிடம் வழங்கினார்.
"2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு 2001-ம் ஆண்டு விலைக்கே வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. ராசாவும் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரமும் ஆலோசித்து முடிவு எடுத்துள்ளனர். ஆகையால் முன்னாள் அமைச்சர் ராசா மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் சிதம்பரம் மீதும் பதிவு செய்யப்பட வேண்டும். ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் செய்யக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. அப்படி இருந்தும் அந்தப் பெரு நிறுவனங்களுக்கு 2 ஜி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆ. ராசா எடுத்துள்ள அனைத்து முடிவுகளிலும் சிதம்பரத்துக்கும் சமமான பங்கு உள்ளது என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
சிதம்பரத்தையும் இந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும். சி.பி.ஐ., நிதி அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகளைச் சாட்சிகளாக அழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதைக் கேட்ட நீதிபதி ஓ.பி. சைனி இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 8-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார். விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, "சிதம்பரத்துக்கு எதிரான சாட்சிகளை விசாரணைக்கு அழைப்பது, சிதம்பரத்தை விசாரணைக்கு அழைப்பது ஆகிய இரு கேள்விகள் தொடர்பாக 8-ம் தேதி நீதிமன்றம் முடிவெடுக்கும்' என்றார்.
முன்னாள் அமைச்சர் ராசா மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் சிதம்பரம் மீதும் பதிவு செய்யப்பட வேண்டும். ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஆகிய தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் செய்யக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது