Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday, 3 December 2011

அறுவை சிகிச்சைகளில் டாக்டர்களின் கவனக் குறைவு : ஆண்டிற்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பு

அறுவை சிகிச்சைகளின் போது, டாக்டர்களின் கவனக் குறைவால், ஆண்டிற்கு, 10 லட்சம் பேர் இறக்க நேரிடுகிறது' என, தமிழ்நாடு மருத்துவ பயிற்சியாளர் சங்க தலைவர் சி.எம்.கே.ரெட்டி கூறினார்.


"இந்திய நுகர்வோர் சங்கம்' எனும் தன்னார்வ அமைப்பின் சார்பில், "இந்தியாவில் சுகாதார முறை, நோயாளிகளை மையப்படுத்தியதாக உள்ளதா?' எனும் தலைப்பிலான கருத்தரங்கம், சென்னை, ஆர்.ஏ.புரத்தில் நேற்று நடந்தது.




கருத்தரங்கை துவக்கி வைத்த பின், தமிழ்நாடு மருத்துவ பயிற்சியாளர் சங்க தலைவர், சி.எம்.கே.ரெட்டி, நிருபர்களிடம்,

’’மருத்துவத் துறையில் நிகழும் தொழில் நுட்ப முன்னேற்றங்களை டாக்டர்கள் அறிந்துக் கொள்வது அவசியம்.

இதை கருத்தில் கொண்டு, "ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை, டாக்டர்களின் திறன், மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்' என்ற, எங்கள் சங்கத்தின் நீண்ட கால கோரிக்கையை, மகாராஷ்டிராவை தவிர,

மற்ற மாநிலங்கள் செயல்படுத்துவதாக தெரியவில்லை. எம்.பி.பி.எஸ்., படிப்பில் உள்ள இடஒதுக்கீடு முறை, மருத்துவ மேற்படிப்புகளிலும் பின்பற்றப்பட வேண்டியதில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில், இன்றும் குடும்ப டாக்டர்கள் முறை உள்ளது. அவர்கள் பரிந்துரையின்றி, நோயாளிகள் சிறப்பு டாக்டர்களிடம் சிகிச்சைக்கு செல்ல முடியாது. நம் நாட்டில் மீண்டும், குடும்ப டாக்டர்கள் முறை வந்தால், நோயாளிகளின் சிகிச்சை செலவு கணிசமாக குறையும்.


உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு ஆய்வறிக்கைப்படி, உலகில் ஆண்டுதோறும், பல்வேறு நோய்களுக்காக, 23 கோடியே 40 லட்சம் பேருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

இவர்களில், 70 லட்சம் பேர், டாக்டர்களின் கவனக் குறைவால் பாதிக்கப்படுகின்றனர். 10 லட்சம் பேர் இறக்கவும் செய்கின்றனர். இதை தவிர்க்க, அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் டாக்டர்களுக்காக, ஒரு பரிசோதனை பட்டியலை தயார் செய்து, அதை அவர்கள் பின்பற்றும்படி செய்ய வேண்டும்’’என்று கூறினார்.


இக்கருத்தரங்கில், "மருத்துவ சேவையில் நுகர்வோர் சந்திக்கும் பிரச்னைகள், மருத்துவத்தில் காப்பீடு நிறுவனங்களின் பங்கு' உள்ளிட்ட தலைப்புகளில், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் விவாதித்தனர்.