Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Sunday, 20 November 2011

பள்ளிப் படிப்பை முடிக்காததால் நான் இன்னும் மாணவன்தான்: கமல்ஹாசன்


பள்ளிப் படிப்பை முடிக்காததால் நான் என்னை இன்னும் மாணவனாகவே உணருகிறேன் என்றார் நடிகர் கமல்ஹாசன்.
பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் எழுதிய "இலக்கியச் சாரல்', "ஜெயிக்கப்போவது நீதான்', "மேடைப் பயணங்கள்', "சந்தித்ததும் சிந்தித்ததும்', "சிரித்துக்கொண்டே ஜெயிப்போம்' என்ற ஐந்து நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் புத்தகங்களை வெளியிட்டு நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:
கு.ஞானசம்பந்தனும் நானும் பல ஆண்டு நண்பர்கள். அவருடன் பல அறிவார்ந்த விஷயங்களை நான் பகிர்ந்துகொண்டுள்ளேன். எனக்கு ஒரு சுயநலம் உண்டு. நன்கு கற்றறிந்தவர்கள், விஷய ஞானம் உள்ளவர்களிடம் பழகி அவர்களிடமிருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது.
மறைந்த எழுத்தாளர் சுஜாதாதான் எனக்கு ஞானசம்பந்தனை அறிமுகம் செய்து வைத்தார். நாங்கள் அடிக்கடி மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். நேரில் சந்திக்க இயலாதபோது தொலைபேசி வாயிலாகவும் இந்தப் பேச்சு தொடர்ந்திருக்கிறது.
ஆரம்ப காலத்தில் நடிக்கும்போது கைகளை எப்படி வைத்திருக்க வேண்டும் என நாடக மேதை டி.கே.எஸ்.சண்முகத்திடம் பல முறை கேட்டிருக்கிறேன். அதைத் தெரிந்துகொண்டால் நீ பெரிய நடிகனாகி விடுவாய் என அவரும் பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
மறைந்த நடிகர் வி.கே.ராமசாமியை எடுத்துக்கொண்டால் அவர் கைகளை ஆட்டாமலேயே நடித்து அனைவரையும் சிரிக்க வைத்துவிடுவார். நாகேஷை எடுத்துக்கொண்டால் அவர் தனது உடல் மொழியிலேயே சிரிக்க வைத்துவிடுவார். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும். அது போல ஞானசம்பந்தனும் தனக்கென ஒரு பாணியை வைத்துள்ளார். அவருடைய நகைச்சுவை இயல்பான ஒன்று.
அவர் சிறந்த இலக்கியவாதி. ஆனாலும் தன்னுடைய புலமையை, தான் அறிந்த கருத்துகளை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் மிக எளிமையாக, இயல்பான நகைச்சுவையில் உணர்த்திவிடுவார். இந்தப் புத்தகங்களிலும் அந்த எளிமை இருக்கிறது. அதனால் இவை அனைவரையும் சென்றடையும்.
நான் பள்ளிப் படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. அதனால்தான் என்னை இன்னும் மாணவனாகவே உணர்ந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். ஒரு வேளை பள்ளிப் படிப்பை முடித்திருந்தால் இந்தக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் எனக்கு இருந்திருக்குமோ என்னவோ?
ஆத்திகம், நாத்திகம் பேசும் அனைவரிடமும் நான் பேசியிருக்கிறேன். அப்படிப் பேசும்போது இரண்டு சாராரிடமிருந்தும் எனக்குத் தேவையான விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்வேன். நான் சினிமாவில் கடவுள் பக்தன், குள்ளன் என பல்வேறு வேடங்களில் நடித்துள்ளேன். ஆனால் நிஜ வாழக்கையில் நடித்ததில்லை என்றார் கமல்ஹாசன்.