
சபரிமலையில் அமல்படுத்தப்பட்டு உள்ள ஆன்லைன் தரிசன திட்டத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி திறக்கப்பட்டது. இந்த சீசனில் பெரும்பாலும் எல்லா நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் அலை மோதும். இதனால் நீண்ட தொலைவில் இருந்து வரும் பக்தர்களால் சரியாக தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதை தவிர்ப்பதற்காக இந்த ஆண்டு முதல் பக்தர்கள் வசதிக்காக ஆன்லைன் தரிசன திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதை கேரள போலீசார் அமல்படுத்துகின்றனர். www.sabarimala.keralapolice.gov.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் தரிசன முன்பதிவு செய்யலாம்.
முன்பதிவு செய்த பக்தர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஏதாவது ஒரு அடையாள அட்டை மற்றும் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் கூப்பன் ஆகியவற்றுடன், பதிவு செய்யப்பட்ட நேரத்துக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக சென்றால் அதிகபட்சமாக ஒரு மணிநேரத்தில் 18ம் படி ஏறி தரிசனம் செய்து விடலாம். இதனால், இந்த திட்டத்துக்கு பக்தர்கள் இடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்துகின்றனர்.
வருமானம் அதிகரிப்பு
சபரிமலை கோயில் வருமானம் கடந்த ஆண்டை விட அதிகமாகி உள்ளது. நடை திறக்கப்பட்ட மூன்றே நாட்களில் கோயில் வருமானம் ஸி 3 கோடியை தாண்டியது. நேற்று வரை கோயில் மொத்த வருமானம் ரூ.3 கோடியே ஒரு லட்சத்து 15,348. இது கடந்த ஆண்டை விட 49 லட்சம் அதிகம்.