Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Thursday, 13 September 2012

""மத்திய அமைச்சர் பதவிகள் வேண்டாம்ங்கற முடிவுல இருக்காரு பா...''

""மத்திய அமைச்சர் பதவிகள் வேண்டாம்ங்கற முடிவுல இருக்காரு பா...'' எனக் கூறியபடியே, நாயர் கடைக்குள் அன்வர்பாய் நுழைந்ததும், "சூடான விவகாரமாய் இருக்கும் போலிருக்கே...' என எண்ணியபடியே, ஏற்கனவே அமர்ந்திருந்த அந்தோணிசாமி, பெரியசாமி அண்ணாச்சி, குப்பண்ணா ஆகியோர், காதைத் தீட்டினர்.

அன்வர்பாய் தொடர்ந்தார்...
""இன்னும் கொஞ்ச நாள்ல, மத்திய அமைச்சரவையை மாத்தி அமைக்கப் போறாங்க... அங்க அமைச்சரா இருந்த ரெண்டு தி.மு.க., அமைச்சருங்க, ராஜினாமா செஞ்சதால, அந்த இடங்கள், "வேகன்ட்டா' இருக்கு... இப்ப, ஜகத்ரட்சகனும், ராஜினாமா செய்யணும்ன்னு, பா.ஜ., சொல்லிட்டிருக்கு... இது எல்லாமே, ஊழல் குற்றச்சாட்டால எழுந்த பிரச்னைங்க... இந்த நேரத்துல, பதவி வாங்குறதுல பிரச்னை ஏற்படும்ன்னு, தி.மு.க., தலைமை யோசிக்குது பா...

""கட்சிக்குள்ளாறவே, யாருக்கு பதவி வாங்குறதுங்கறதை முடிவு செய்யறதும் சிக்கல் தான்... ஏன்னா, கனிமொழி, ஸ்டாலின், அழகிரின்னு, அவங்கவங்க ஆதரவாளருங்க கொடி பிடிக்கிறாங்க... ரொம்ப வருஷமா டில்லியிலேயே இருக்குற, டி.ஆர்.பாலுவை திருப்திபடுத்தணும்ன்னு, ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கு... அதனால, இப்போதைக்கு அமைச்சர் பதவி ஏதும் வேண்டாம்ன்னு சொல்லிடலாமான்னு, கருணாநிதி யோசிச்சிட்டிருக்காரு பா...'' எனக் கூறினார் அன்வர்பாய்.

""கூட்டுறவு சங்கத் தேர்தல் அறிவிச்சாலும் அறிவிச்சாங்க... கட்சிக்காரங்க, மக்களை ஏமாத்த கிளம்பிட்டாங்க...'' என, அடுத்த மேட்டரை ஆரம்பித்த அந்தோணிசாமி, தானே தொடர்ந்தார்...

""மதுரையில, அங்கங்க நிறைய கவுன்சிலர்கள், கூட்டுறவு சொசைட்டியை கைப்பத்தணும்னு, "உள்வேலை' பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க... பழைய உறுப்பினருங்கல்லாம், தங்களுக்கு ஓட்டு போட மாட்டாங்கங்கற முடிவுக்கு வந்து, இப்ப, புது உறுப்பினர்களைச் சேர்க்கற வேலைல எறங்கிட்டாங்க...

""குடும்பத் தலைவிங்க கிட்டேர்ந்து ரேஷன் கார்டு நகல் வாங்கி, "உங்களுக்கு லோன் தர்றோம்... சங்கத்துல உறுப்பினரா சேருங்க... நாங்க கை காட்டுறவங்களுக்கு ஓட்டுப் போடுங்க...'ன்னு, "கேன்வாஸ்' பண்றாங்க... இதுக்கு நல்ல பலனும் கிடைச்சுருக்கு...'' என, மூச்சு விடாமல் கூறினார் அந்தோணிசாமி.

""பழம், வாட்டர் கேன், காய்கறின்னு தினசு, தினசா வந்ததெல்லாம் நின்னுடுத்து ஓய்...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் குப்பண்ணா.

""யாருங்க... அப்படின்னா, கொலை பட்டினியால்ல இருக்கணும்...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

""கொலையும் இல்லே... பட்டினியும் இல்லே... விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்துக்கு, மேற்படி சமாச்சாரம்லாம், ரெகுலரா வந்துண்டு இருந்துது... அங்க இருக்கற போலீஸ்காரால்லாம் ஜமாய்ச்சுண்டு இருந்தா... வடக்கு மண்டல ஐ.ஜி., கண்ணப்பன், சமீபத்துல, திடீர்ன்னு ஒரு நாள், ஆய்வு செய்யறேன்னு வந்து நின்னுட்டார்... அவர் கிட்டே, இது சம்பந்தமா புகார் போய்டுத்து... எல்லா போலீஸ்காராளையும் கூப்ட்டு, "லெப்ட் அண்டு ரைட்' வாங்கிட்டார்... அதனால, இப்போ, பழம், காய்கறி, வாட்டர் கேன்லாம், மிஸ்சிங்...'' என, வாயெல்லாம் பல்லாகக் கிளம்பினார் குப்பண்ணா.

""கண்ணப்பனை போல, நூத்துல ஒருத்தர தான் பார்க்க முடியுதுங்க...'' எனக் கூறியபடி எழுந்து கிளம்பினார் அந்தோணிசாமி. மற்றவர்கள் கிளம்பவே, போலீஸ் போல மீசையை முறுக்கிக் கொண்டார் நாயர்!