Tuesday, 4 September 2012
ஊனம் என்பது உடலில் இல்லை உணர்வுகளில் மட்டுமே!
இயக்குனர் லாரன்ஸ் மற்றும் மனோஜ்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இயக்குனர் T.சாமிதுரை. மாற்றுத்திறனாளியான இவர் இயக்குனராக வேண்டும் என்ற நோக்கத்தோடு கள்ளக்குறிச்சியிலிருந்து வந்து உதவி இயக்குனராக பணிபுரிந்து இப்போது ‘குறும்புக்கார பசங்க’ என்ற படத்தின் மூலம் இயக்குனராகியுள்ளார்.
இது பற்றி பேசிய போது சாமிதுரை “ எனது குறும்பட சிடியை பார்த்த பின் மனோஜ்குமார் எனக்கு உதவி இயக்குனராக பணிபுரிய வாய்ப்பு கொடுத்தார். லாரன்ஸ் அவர்களும் எனக்கு வாய்ப்பு கொடுப்பதாக உறுதியளித்து அவரது டிரஸ்டிலேயே தங்க இடம்கொடுத்தார். 8 வருட உழைப்பிற்குப் பின் குறும்புக்கார பசங்க படத்தை எடுக்க முடிவெடுத்து 45 நாட்களில் படமெடுத்து முடித்தோம்” என்று கூறினார். இந்த படத்தில் சஞ்சீவ், ’அழகி’ மோனிகா ஹீரோ ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள்.
916 என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் மோனிகா குறும்புக்கார பசங்க படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக, ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு கேரளாவிலிருந்து வந்திருக்கிறார். இது பற்றி பேசும் போது மோனிகா “ இந்த படத்துல சஞ்சீவுக்கு ஜோடியா சிந்து கேரக்டர்ல நடிச்சிருக்கேன். சஞ்சீவுடன் நடிப்பதை ஒரு போட்டியாக நினைத்து நடித்தேன். படத்தின் பெயரில் குறும்பு இருக்கிறதே தவிர நாங்க நல்ல டீம். முதல் முதலில் சாமிதுரையை பாத்ததும், இவரால் முடியுமானு யோசிச்சேன்.
ஆனால் அவரின் கதை சொல்லும் நேர்த்தியும் திறமையும் பார்த்து வியந்தேன்” என்று கூறிவிட்டு கேரளாவிற்கே பறந்துவிட்டார்.
மேலும் இசைவெளியீட்டு விழாவில் பேசிய கலைப்புலி எஸ். தானு “ஏ.ஆர்.முருகதாஸ் ஊரிலிருந்து வரும் இந்த இயக்குனர், ஏ.ஆர்.முருகதாஸை விட பெரிய சாதனைகளை செய்வார்” என்று வாழ்த்தினார்.
சினேகன் பேசிய போது “ சாமிதுரை ஒரு பெரிய சவாலோடு இந்த படத்தை எடுத்திருக்கிறார். மனிதனுக்கு ஊனம் என்பது உடலில் இல்லை உணர்வுகளில் மட்டுமே இருக்கிறது” என்று கூறி சாமிதுரையை ஊக்கப்படுத்தினார்.
Labels:
sirakugal news