Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Friday, 7 September 2012

யுவராஜும், ஹர்பஜனும் தங்கள் இடத்தை மீண்டும் பிடிப்பர்: டோனி நம்பிக்கை

நாளை நடக்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் ஆடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் விசாகப்பட்டினம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட யுவராஜ் சிங்கும், மோசமான ஆட்டம் காரணமாக ஓரங்கட்டப்பட்ட ஹர்பஜன் சிங்கும் இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதால் அவர்கள் இருவர் மீதும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

யுவராஜ் மற்றும் ஹர்பஜன் பற்றி இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அப்போது, ‘அணியில் தங்கள் பழைய இடத்தை உறுதி செய்வதில் அவர்கள் இருவரும் ஆர்வமுடன் உள்ளனர். இது ஒரு நல்ல அறிகுறியாகும். அணியில் இடம்பெறத் தவறிய பின்னர், மீண்டும் அணியில் இடம் பிடிப்பது கடினமானது. நாட்டின் பிரதிநிதியாக சிறப்பாக செயல்படவே அனைவரும் விரும்புவர். சிறப்பாக விளையாடும் ஆர்வமும் தாகமும் யுவராஜ் மற்றும் ஹர்பஜனிடம் உள்ளது. அவர்கள் சிறப்பாக விளையாடி 20 ஓவர் போட்டி மட்டுமின்றி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் நிரந்தர இடத்தைப் பிடிக்க முடியும். தங்கள் திறனை வெளிப்படுத்த இருவருக்கும் இது நல்ல வாய்ப்பாகும்’ என்றார் டோனி.

நாளைய போட்டியில் ஆடும் லெவன் பற்றி பேசிய டோனி, ‘சிறந்த 11 வீரர்கள் கொண்ட அணி களமிறங்கும். இதே அணிதான் உலககோப்பையிலும் ஆட உள்ளது. எனவே சோதனை முயற்சிகள் இன்றி, சிறந்த அணியைக் களமிறக்க விரும்புகிறோம். எல்லா ஆட்டங்களும் ஒரே அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே இத்தொடரையும் நாங்கள் சிறந்த முறையில் துவங்க விரும்புகிறோம்’ என்றார்.

மேலும், ‘நாங்கள் எங்கள் திறமை மற்றும் திட்டங்களை களத்தில் சிறந்த முறையில் செயல்படுத்த விரும்புகிறோம். எதிரணியைப் பற்றி அவ்வளவாக சிந்திக்க விரும்பவில்லை. போட்டிக்கான திட்டங்கள் மற்றும் வியூகங்களுடனும், முழு பலத்துடனும் களமிறங்குவோம்’ எனவும் டோனி பேசினார்.