இந்திய கிரிக்கெட் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், சமூக வலைதளமான "பேஸ்புக்கில்' நேற்று இணைந்தார்.
2010ல் "டுவிட்டர்' சமூக வலைதளத்தில் சச்சின் இணைந்தார். இதையடுத்து, பல ரசிகர்கள் "டுவிட்டரில்' இணைந்தனர். தற்போது 26,80,952 ரசிகர்கள் "டுவிட்டர்' இணையதளத்தில் இவரை பின்பற்றுகின்றனர். மற்றொரு சமூக வலைதளமான "பேஸ்புக்கிலும்' இந்திய நட்சத்திர வீரர் சச்சின் நேற்று இணைந்தார்.
இதையடுத்து, சில மணி நேரத்தில் 4 லட்சம் பேர் இவரை பின் பற்ற துவங்கினர். இதில் போட்டோக்கள், வீடியோக்களை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். இந்திய வீரர் யுவராஜ் சிங் குறித்தும் ஜூனியர் உலக கோப்பை தொடரில் கோப்பை வென்ற இந்திய கேப்டன் உன்முக்த் சந்த்திற்கும், பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
சச்சின் கூறியது:
எனது "பேஸ்புக்' சமூக வலைதளத்திற்கு எல்லா ரசிகர்களையும் வரவேற்கிறேன். சிறுவயது முதல், உலக கோப்பை வெல்லும் இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்ற கனவு நிறைவேற தொடர்ந்து 22 ஆண்டுகளாக ஓடினேன்.
ரசிகர்களின் ஆதரவு இல்லை என்றால், இது சாத்தியம் இல்லை. எனக்காக வேண்டிக் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சிறந்த வழியாக இதை கருதுகிறேன்.
2011ல் நடந்த உலக கோப்பை தொடரில், தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார் இந்திய வீரர் யுவராஜ் சிங்."கேன்சர்' பாதிப்பில் இருந்து மீண்ட இவர், மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்பியது மகிழ்ச்சி.
இவ்வாறு சச்சின் கூறினார்.