இளமை...! வாழ்வின் வசந்த காலம், உடம்பில் சூடாக ரத்தம் ஓடும் துடிப்பான பருவம் என்றெல்லாம் பேசிக் கொண்டே போவோம். ஆனால் ஒருவரை `இளைஞர்' என்று எந்த வயது வரை சொல்லலாம் என்று கேட்டால் ஆளுக்கு ஆள் கருத்து மாறுபடும். டீனேஜ் பசங்க, `20 வயது தாண்டிட்டாலே `யூத்'துங்கிறது காத்தோட போச்சு பாஸ்' என்பார்கள்.
இன்னும் சிலர், `இருபத்தஞ்சு வயசு வரை சொல்லலாம்' என்பார்கள். 30 வயதைத் தாண்டிய முது இளைஞர்கள், `ஒரு முப்பத்தஞ்சு, முப்பத்தாறு வரை...?' என்று இழுப்பார்கள். நாம் இதுபற்றிச் சிந்தித்திருக்கிறோமோ இல்லையோ, அரசாங்கம் இதுகுறித்து யோசித்திருக்கிறது. இப்போதைக்கு `அதிகாரப்பூர்வமாக' இளமைப் பருவம் என்பது `13 வயது முதல் 35' வயது வரை.
அதை `16 முதல் 30' என்று மாற்ற நினைக்கிறது மத்திய அரசு. இதனால், நானும் இளைஞன்தான் என்று மனதுக்குள் மார்தட்டிக் கொண்டிருந்த இளைஞர்கள் பலர் இனி `வெளியே' தள்ளப்படுவார்கள். புதிய இளமைக் கொள்கைக்கான வரைவு மசோதாவை வெளியிட்டிருக்கிறார், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான்.
புதிய மசோதாவின்படி இளமையை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, திட்டங்களை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது அரசு. அதாவது, 16 வயது முதல் 20 வயது வரை உள்ளவர்களை இலக்காக வைத்து கல்வித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும். 20- 25 வயதுக்காரர்களுக்கு வேலைத் திறனை வளர்க்கும் திட்டங்கள், 25-க்கு மேல் 30 வரையுள்ள `சீனியர்' இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்பு, தொழில்முனைவுத் திட்டங்கள் உருவாக்கப்படும்.
இந்தியா தனது இளமையான காலகட்டத்துக்குள் பிரவேசிக்கப் போகும் நிலையில், மத்திய அரசின் `இளமை வரையறை' ஒரு முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது. ஆம், 2020-ம் ஆண்டுவாக்கில் இந்தியர்களின் சராசரி வயதாக 29 இருக்கும். முந்தைய இளமை கணக்குப்படி நாட்டில் சரிபாதிப் பேர் `இளைஞர்கள்'.
ஆனால் தற்போது அரசாங்கம் 5 ஆண்டுகளை தள்ளுபடியாக அறிவித்துவிட்டால், இந்த 50 சதவீதம் பேரில் 10 சதவீதம் பேர் இளைஞர்கள் என்ற தகுதியை இழந்துவிடுவார்கள். சரி, இளமையை வரையறுக்க அரசு முனைப்புக் காட்டுவது ஏன்? அப்போதுதான் பல்வேறு அமைச்சகங்களும் இளைஞர்களுக்கான திட்டங்கள், கொள்கைகளை ஒரே சீராக உருவாக்க முடியும் என்கிறார்கள்.
இளமைக்கான முந்தைய வரையறை கொஞ்சம் பொருத்தமற்றதாக இருப்பதாகக் கூறுகிறார், விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான். ``உதாரணமாக ஒரு பெண் 18 வயதில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றால், அக்குழந்தைக்கு 13 வயதாகும்போது அப்பெண்ணுக்கு 31 வயதாகும். இருவருமே அதிகாரப்பூர்வமாக இளைஞர்கள் வட்டாரத்தில் வந்துவிடுவார்கள்'' என்கிறார்.
``சரியான இளமைப் பருவத்தினரை அரசுத் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதுதான் நோக்கம். வயது விஷயத்தில் அமைச்சகங்களுக்குள் குழப்பம் வரக் கூடாதில்லையா?'' என்கின்றனர் அதிகாரிகள். 18 வயதை எட்டினால்தான் `மேஜர்' என்று மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஏற்கனவே தெளிவாக வரையறை செய்துள்ளது.
இதற்கிடையில், மத்திய அரசின் புதிய இளமை வட்டத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது. ``இந்தியாவைப் பொறுத்தவரை 35 வயது வரை இளமையாகக் கருதப்படுகிறது. அதை 30 ஆகக் குறைக்க வேண்டியது என்ன அவசியம்? இன்று ஒருவர் மருத்துவ அல்லது பொறியியல் படிப்பை முடிக்க 25 வயதாகிறது.
அவர்கள் `ஸ்பெஷலைஸ்' செய்தாலோ, பி.எச்டி. பண்ணினாலோ மேலும் வயது கூடும். அப்போது அவர்களுக்கு இளைஞர்களுக்கான எந்த நலத் திட்டப் பயன்களும் கிடைக்காமல் போகுமே? ``பிளாஸ்டிக் சர்ஜரி முதல் அழகுச் சிகிச்சைகள் வரை இன்று ஒருவரை இளமையாகத் தோன்றச் செய்ய எண்ணற்ற விஷயங்கள் வந்துவிட்டன.
இந்நிலையில், இளமைக்கு ஒரு வயது வரம்பு நிர்ணயிப்பதால் என்ன பிரயோஜனம்?'' அமெரிக்கா இளைஞர்கள் என்று 16 முதல் 34 வயதினரை குறிப்பிடுகிறது. சீனா, 15 முதல் 29 வயதினரை குறிப்பிடுகிறது. ஆஸ்திரேலியா 15 முதல் 24 வயதை இளமை என்கிறது. ஐக்கிய நாட்டு சபையும் ஆஸ்திரேலிய கணக்கைத்தான் பின்பற்றுகிறது.
இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரையறை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். நாமும் இளைஞன்தான் என்றே எண்ணிக் கொள்வோம். மகள் வயது ஹீரோயினுடன் `டூயட்' பாடும் `முதிய' கதாநாயகர்கள் இருக்கும் தேசத்தில் எல்லோரும் அப்படி நினைத்துக்கொள்வதில் ஒன்றும் தப்பில்லை! ***