தமிழகம் மற்றும் கேரளாவில் வாலிபர்கள் பலரை தனது காதல் வலையில் வீழ்த்திய அழகி சகானா, அவர்களை திருமணம் செய்து நகை-பணத்தை பறித்து மோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்துக்கு வந்தது.
முகலிவாக்கத்தை சேர்ந்த மணிகண்டன், புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னா, திருவொற்றியூரை சேர்ந்த சரவணன், அடையாறை சேர்ந்த இன்னொரு சரவணன் என சகானாவிடம் ஏமாந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இவர்களில் மணிகண்டனும், பிரசன்னாவும், சகானாவுடன் திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட போட்டோக்களை ஆதாரங்களாக கொடுத்துள்ளனர். சகானாவிடம் 50 பேர் வரை ஏமாந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இதுவரை 5 பேர் மட்டுமே புகார் மனுக்களை அளித்துள்ளனர்.
இந்த புகார் மனுக்கள் அனைத்தும் அடையாறு உதவி கமிஷனர் மோகன்ராஜுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள சகானாவின் செல்போன் எண்களை வைத்து, போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். அவர் கடைசியாக பயன்படுத்திய 2 செல்போன்கள் மட்டுமே, தற்போது, போலீசுக்கு துருப்பு சீட்டாக உள்ளது. இந்த செல்போன் எண்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
ஆனால் சகானாவின் செல்போன்கள் எப்போதும் சுவிட்ச் ஆப் செய்தே வைக்கப்பட்டுள்ளதால் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அதே நேரத்தில் சகானா தமிழ்நாட்டுக்குள் இல்லை என்பதை மட்டும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் வரை சகானாவின் செல்போன் தொடர்பில் இருந்தது. அப்போது போலீசார் அதில் தொடர்பு கொண்டனர். அவர் வெளி மாநிலத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காதல் கணவர்களை வைத்து, சகானாவை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அவரது செல்போன் எண்களுக்கு, காதல் கணவர்களை நைசாக பேச வைத்து, சகானாவை பொறியில் சிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறது. அதே நேரத்தில், சகானா, புகார் கொடுத்த கணவர்கள் யாரிடமாவது மீண்டும் பேசுகிறாரா? என்பதையும் கண்காணித்து வருகிறார்கள். இது எந்த அளவுக்கு போலீசுக்கு கை கொடுக்கும் என்று தெரியவில்லை.
சகானா மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் தொடர்ந்து வந்த 2 நாட்களும், போலீசார் இந்த விவகாரத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்து விட்டனர். இப்போது தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் கதையாக சகானாவை தேடி வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.