அமெரிக்கர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற மதுபானமாக பீர் விளங்குகிறது. சமீபத்தில் அங்கு நடத்தப்பட்ட சர்வேயில் இத்தகவல் தெரியவந்துள்ளது. சராசரியாக வாரத்துக்கு 4 முறை மது அருந்துவதாக அமெரிக்கர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 6ம் தேதி நடக்கிறது. டெமாக்ரடிக் கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய அதிபர் பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெறுவாரா, ரிபப்ளிக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற் பட்டுள்ளது. இந்த பரபரப்புக்கு நடுவில், பீருக்கு அமெரிக்கர்களின் அமோக ஆதரவு தொடர்ந்து இருந்து வருவது லேட்டஸ்ட் சர்வேயில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் குடி பழக்கம் தொடர்பாக கேலப் நிறுவனம் சமீபத்தில் ஒரு சர்வே நடத்தியது. 50 மாநிலங்களில் ஆயிரத்துக்கும் அதிகமானோரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. வாரத்துக்கு எத்தனை முறை தண்ணி அடிப்பீர்கள், என்ன சரக்கு அடிப்பீர்கள் என்பது போன்ற கேள்விகள் இடம்பெற்றன. சர்வேயில் தெரியவந்த சுவாரஸ்ய தகவல்கள்: பேஸ்பால் மேட்ச் பார்க்கும்போதோ, சூப்பர் அசைவ விருந்து சாப்பிடும்போதோ ஒரு கையில் பீர் கோப்பை இருப்பதை அமெரிக்கர்கள் பலர் விரும்புகின்றனர். மது பானங்களில் பல வகைகள் இருந்தாலும், பீர் ரசிகர்கள்தான் அதிகம். பெரும்பாலும் பீர் குடிப்பதாக 39 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, ஒயின் விரும்பி குடிப்பதாக 35% பேர் கூறியுள்ளனர். பிராந்தி, ஜின், ரம், வோட்கா குடிப்பதாக 22% பேர் கூறினர். அது மட்டுமின்றி, 18 முதல் 54 வயது வரை உள்ளவர்களுக்கு மிகவும் பிடித்த மதுபானமாக விளங்குவது பீர். 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் ஒயினை விரும்பி குடிக்கின்றனர். அமெரிக்காவின் மத்திய, மேற்கு பகுதிகளில் பீரும், கிழக்கு பகுதியில் ஒயினும் செல்வாக்குடன் விளங்குகின்றன. சராசரியாக வாரத்துக்கு 4.2 முறை மது அருந்துவதாக 66 சதவீதம் பேர் கூறுகின்றனர். இந்த வகையில், அமெரிக்கர்கள் ரொம்பவே ஸ்டெடியாக இருக்கின்றனர். கடந்த ஆண்டில் ஏறக்குறைய 64 சதவீதம் பேர் இதே பதிலை கூறியிருந்தனர். சில நேரங்களில் லிமிட்டை தாண்டி தண்ணியடித்துவிட்டு மட்டையாகி விழுந்துவிடுவதாக 14 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.