Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday, 31 December 2011

சரித்திரம் நம்மை மெச்சும்!

நமது அய்யா அறிவாசான் பகுத்தறிவுப் பகலவன் - உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் பெரியார் நினைவு நாள் - இது ஒரு வரலாற்றுக் குறிப்புதான்!

ஆனாலும் அவர் நினைக்கப்படாத நாள் இல்லை.

சிலரைப் பார்த்து அவர் மகான் - அவரைச் சுற்றி ஒளிவட்டம் என்று சொல்லப்படுவதுண்டு.

அப்படி ஒரு ஒளி வட்டமும் கிடையாது - அது ஒரு டுப்பாக்கூர்!

ஆனால், தந்தை பெரியாரைச் சுற்றி எப்பொழுதும் சர்ச்சைகள் சூழ்ந்தே இருக்கும். ஓடும் நீரோட்டத்தில் அடித்துக் கொண்டு போகும் ஓலையல்லவே - எதிர்நீச்சல் போட்டு சிகரங்களின் சிண்டுகளைப் பிடித்துக் குலுக்கும் சிங்கமாயிற்றே!

ஆம், நாளும் அவர் நினைக்கப்படுகிறார் - சிந்திக்கப்படுகிறார் - எடுத்துக்காட்டப்படுகிறார்!

இந்தப் பிரச்சினையில் பெரியாரின் கருத்தென்ன? என்பதைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் மட்டுமல்ல; அவசியமும் ஏற்பட்டுவிட்டது!

இவ்வாண்டு தந்தை பெரியார் நினைவு நாளான அந்த வரலாற்றுக் குறிப்பு நாளில் (டிசம்பர் 24 இல்) கழகக் குடும்பத்தினரே - நாம் அனைவரும் அய்யாவின் நினைவிடத்தில் சங்கமிக்க இருக்கிறோம்!

நமது சூளுரையைப் புதுப்பித்துக் கொள்வோம் - கூர்தீட்டிக் கொள்வோம்!!

காலையில் பொதுக்குழு! திருச்சியில் கூடிய கடந்த பொதுக்குழுவில் (11.9.2011) நாம் வடித்த வரலாற்றுச் சிறப்புத் தீர்மானத்தின் கலகலப்பான எதிரொலி இந்தப் பொதுக் குழுவில் ஒலிக்கப் போகிறது!

விடுதலை என்னும் போர்வாளின் ஆசிரியராக 50 ஆம் ஆண்டில் (1962-2012) அடியெடுத்து வைக்கும் நமது ஆசிரியருக்கு 50 ஆயிரம் விடுதலை சந்தாக்கள் என்ற தீர்மானத்தை வடித்தோம்!

உலகத்தில் எந்த இயக்கமும் அல்லது அமைப்பும் இப்படி ஒரு முடிவை எடுத்தது கிடையாது!

நம்மால் எடுக்க முடிந்தது - காரணம் நாம் கொள்கையாளர்கள் - இலட்சியவாதிகள்!
இடையில் இருக்கும் இரண்டொரு நாள்களில் நமக்கென்று நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை முடித்து அந்தப் பூரிப்புடன் தலைநிமிர்வுடன் நமது தலைவர் அவர்களைச் சந்திக்க இருக்கிறோம்!

ஒன்றை இந்த நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் நினைவுக்குக் கொண்டு வருவோம்.

விடுதலை என்னும் மூச்சுக் காற்றால் தமிழினம் வாழ்கிறது என்று சொல்லுகிறோமே -

அந்த மூச்சுக் காற்று 1962 இல் தன் சுவாசத்தை நிறுத்தி இருக்கும்.

ஆனாலும், இன்றும் அந்த மூச்சுக் காற்று நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்றால், அதற்கு யார் காரணம்?

இதோ தமிழினப் பாதுகாவலர் தந்தை பெரியார் அதற்கான காரணத்தைக் கூறுகிறார் - கேளுங்கள்! கேளுங்கள்!!

உண்மையைச் சொல்லுகிறேன்: தோழர் வீரமணி இந்த முழு நேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால், தினசரி விடுதலையை நிறுத்தி வாரப் பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன் (விடுதலை, 10.8.1962) என்றாரே!

பெரியாரால் வாழ்கிறோம் - அவர் தந்த விடுதலை என்னும் மூச்சுக் காற்றால் வாழ்கிறோம்- அந்த மூச்சுக் காற்றை - விடுதலையின் ஆசிரியராக 50 ஆண்டுகாலம் இருந்து வழங்கி வரும் தலைவரால் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
இதுதானே உண்மை? மறுக்க முடியுமா?

நாம் வாழ்வதற்கு விடுதலை மூச்சுக் காற்றுக் காரணம் என்றால், அதன் அரை நூற்றாண்டு ஆசிரியர் வாழ்வு நீள்வதற்கு எது காரணம்?

எது உந்து சக்தி?

திருச்சி பொதுக்குழுவிலேயே மனந்திறந்து வாய் மணக்கக் கூறிவிட்டாரே!

50 ஆயிரம் விடுதலை சந்தாக்களை என்னிடம் நீங்கள் வழங்குவீர்களேயானால், என் ஆயுளும் நீளும் என்று கூறிவிட்டாரே! எப்படியெல்லாம் கையொலி எழுப்பினோம்!

கழகத் தோழர்களே, தோழியர்களே, கருஞ்சட்டைக் குடும்பத்தினரே!

அய்யா நினைவு நாளில் பெரியார் திடல் கருஞ்சட்டைக் கடலாக இருக்கட்டும்! இருக்கட்டும்!! திடல் கடலாகட்டும்!!

கழகப் பொறுப்பாளர்களே, பொறுப்பாளர்களே!

சால்வை வேண்டாம் சந்தாக்களைக் கொடுங்கள் என்று யாசித்த தலைவர் நம் தலைவர்! (தஞ்சைப் பொதுக்குழுவில், 2003)

ஒரு மாற்றம் நடந்தாகவேண்டும் - அதுவும் நம்மால் மட்டும் நடந்தாக வேண்டிய மாற்றம்!

அரசியலில், சமுதாயத்தில், அனைத்துத் துறைகளிலும் - நாளும் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் நமது கடமையின் வேகத்தை - பளுவை அதிகரிக்கச் செய்கின்றனவே!

தந்தை பெரியார் சொன்னதையே ஆச்சாரியாரும் (ராஜாஜியும்) ஒப்புக்கொண்டு சொன்னார்:

தேவர்கள் - அரக்கர்கள் போராட்டம் இன்றைய தமிழ்நாட்டின் நிலை என்றாரே! (18.9.1953 இல் சென்னை திருவொற்றியூரில்).

இதில் நாம் வெற்றி பெறவேண்டாமா? அதற்குத் தேவை - நமது போர் ஆயுதம் என்று தந்தை பெரியார் சொன்னாரே - அந்த விடுதலை தானே!

விடுதலையால்தான் விடுதலை கிடைக்கவேண்டும்!

50 ஆயிரம் இளைஞர்களிடத்தில் விடுதலை என்னும் போர்வாள் போய்ச் சேரட்டும்; பார்க்கலாம்.

அதன் விளைவு மகத்தானதாகவே இருக்கும்!

சந்தாக்களோடு வாருங்கள் தோழர்களே! சரித்திரம் நம்மை மெச்சும்!