கொடைக்கானலில் நான்கு ரோடு சந்திக்க கூடிய பிரதான பகுதியான மூஞ்சிக்கல்லில் இருந்து அண்ணாசாலை செல்லும் பகுதி ஒன்வே ஆக உள்ளது. நேற்று மதியம் போக்குவரத்து விதியை மீறி கார் ஒன்று வேகமாகச் சென்றது.
சிறிது தூரம் சென்றதும், திடீரென அதே வேகத்தில் கார் பின்நோக்கி வந்தது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். காரில் மூன்று பேர் இருந்தனர். மூவரும் போதையில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எஸ்ஐக்கள் ரவிச்சந்திரன், சாய்சுந்தரேசன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். காருக்குள் இருந்தவர்கள், ‘நீங்க கொடைக்கானல் போலீசுன்னா..நாங்க மதுரை போலீசுடா,’ என்று அதிகார தோரணையில் பேசி தகராறு செய்தனர்.
ஆத்திரமடைந்த போலீசார், மூவரையும் பிடித்து வெளியே இழுத்து போட்டு தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.
அங்கு வைத்து விசாரித்ததில் மதுரையை சேர்ந்த அசோகன், மீனாட்சி அம்மன் கோயில் பகுதி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீஸ்காரர் விஜயராகவன், மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றும் சுப்புரத்தினம் என தெரியவந்தது. மூவரிடமும் கொடைக்கானல் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.