கல்லூரிகளில் படிக்கும் என்ஜினீயரிங் மற்றும் அறிவியல் பட்டப் படிப்பு மாணவர்கள் மாதம் ரூ.6 ஆயிரம் உதவித்தொகையுடன் கோடை காலத்தில் ஆராய்ச்சிப் பயிற்சியை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது ஜவஹர்லால் நேரு சென்டர் ஃபார் அட்வான்ஸ்ட் சயின்டிபிக் ரிசர்ச்.
பொதுவாக பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள், தாங்கள் விரும்பும் கல்லூரிகளில் விரும்பிய படிப்புகளில் சேருவதற்காக பிளஸ் டூ தேர்வுகளில் மிக அதிக மதிப்பெண்களை எடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். கல்லூரிகளில் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்ந்த பிறகு, அவர்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் பயிற்சி பெறவும் படிக்கவும் பல வாய்ப்புகள் இருக்கின்றன. கல்லூரிப் படிப்பில் பெறும் மதிப்பெண்கள் முக்கியத்துவம் வாய்ந்தது என்றாலும்கூட, மாணவர்களின் திறமை, ஆய்வு, கருத்தரங்குகளில் கட்டுரைகள் சமர்ப்பித்தல், புராஜக்ட், சாப்ட் ஸ்கில்ஸ் போன்ற பல்வேறு அம்சங்களை மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்யும் நிறுவனங்கள் கருத்தில் கொள்கின்றன. கல்லூரிப் படிப்பைத் தாண்டி மாணவர்கள் எந்தவிதமான பயிற்சி பெற்றிருக்கிறார்கள் அல்லது திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் பார்க்கின்றன. இந்த நிலையில், கோடை கால விடுமுறையில் தொழில் நிறுவனங்களின் இன்டர்ன்ஷிப் அல்லது ஆய்வு நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன.
பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் கலை, அறிவியல் கல்லூரிகளில் அறிவியல் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கும் ஆய்வு நிறுவனங்களில் விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆராய்ச்சியில் பயிற்சி பெறும் வாய்ப்பை வழங்குகிறது ஜவஹர்லால் நேரு சென்டர் ஃபார் அட்வான்ஸ்ட் சயின்டிபிக் ரிசர்ச். பெங்களூரை அடுத்து உள்ள ஐக்கூரில் செயல்பட்டு வரும் இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகம், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை, ராஜீவ்காந்தி ஃபவுண்டேஷன் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து இந்தப் பயிற்சிக்கான ஃபெல்லோஷிப்களை வழங்குகிறது. கோடை காலத்தில் இரண்டு மாத காலம் நடைபெறும் இந்த ஃபெல்லோஷிப் பெற தேர்வு செய்யப்படும் மாணவர்கள், இந்தியாவில் பல்வேறு அறிவியல் மையங்களில் உள்ள விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் உதவித் தொகையும் வழங்கப்படும். அத்துடன் போக்குவரத்து செலவுத் தொகையும் வழங்கப்படும்.
இந்த ஃபெல்லோஷிப் கோரி யார் விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்பிக்கும் கல்லூரி மாணவர்கள் பத்தாம் வகுப்பிலும் பிளஸ் டூ வகுப்பிலும் கணிதத்திலும் அறிவியலிலும் 80 சதவீதத்திற்குக் குறையாத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். லைஃப் சயின்ஸ் மற்றும் கணிதத்துறையில் ஆய்வுக்கு பி.எஸ்சி. முதல் அல்லது இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பி.இ., பி.டெக். படிப்புகளில் முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும் எம்.எஸ்சி. முதல் ஆண்டு படிக்கும் மாணவர்களும் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. படிப்பில் இரண்டாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டு வரை படிக்கும் மாணவர்களும் இத்துறைகளுக்கான ஆய்வுப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
மெட்டிரீயல் சயின்சஸ், கெமிக்கல் சயின்சஸ், பிசிக்கல் சயின்சஸ், என்ஜினீயரிங் சயின்சஸ், அட்மாஸ்பெரிக் சயின்சஸ் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிப் பயிற்சி மேற்கொள்ள பி.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். பி.இ., பி.டெக். படிப்புகளில் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்களும் எம்எஸ்சி முதல் ஆண்டு படிக்கும் மாணவர்களும் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. படிப்பில் இரண்டாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டு வரை படிக்கும் மாணவர்களும் இந்தப் பயிற்சி ஆய்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
எந்தத் துறையில் ஆராய்ச்சி செய்ய விருப்பம் என்பதை விண்ணப்பத்தில் குறிப்பிடுவதுடன் கடிதத்தின் உறையின் மேற்புறத்திலும் குறிப்பிட வேண்டியது அவசியம். இந்த விண்ணப்பத்துடன் உங்களைப் பரிந்துரைக்கும் இரண்டு பேராசிரியர்களின் சீலிட்ட அறிக்கைகளை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மதிப்பெண் சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதிகளையும் இணைத்து அனுப்ப வேண்டும். ஏற்கெனவே, இந்தப் பயிற்சித் திட்டத்தின் கீழ் சேர்ந்து பயிற்சியை முடித்த மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த கோடை காலப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள், இதற்கான விண்ணப்பங்களைக் கேட்டு நவம்பர் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அதாவது, 10 ரூபாய் தபால் தலையுடன் சுயவிலாசம் எழுதிய 16X25 நீளமுள்ள உறையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
டிசம்பர் முதல் தேதியிலிருந்து இணைய தளத்திலிருந்து விண்ணப்பங்களை டவுன்லோடு செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிசம்பர் 2ம் தேதிக்குள் கிடைக்கும்படி விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் குறித்த விவரம் மார்ச் 31ம் தேதி வாக்கில் அறிவிக்கப்படும். எதிர்காலத்தில் ஆய்வுத் துறையில் ஈடுபட விரும்பும் மாணவர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய இந்த கோடை கால ஆராய்ச்சிப் பயிற்சி அரிய வாய்ப்பு. ஆராய்ச்சியில் ஆர்வமிக்க திறமையான கல்லூரி மாணவர்கள் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!