Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Tuesday, 11 September 2012

சீரும், சிறப்பும் வாய்ந்தவர்கள் நம்மைப் பெற்றெடுத்த தாய் தான்


இவ்வுலகிலே சீரும், சிறப்பும் வாய்ந்தவர்கள் யாரென்று கேட்டால், அனைவருமே நம்மைப் பெற்றெடுத்த தாய்மார்களைத்தான் கூறுவோம். தாய்மை என்பது பெண்களுக்கே உரிய தனிச்சிறப்பு. மனித குலத்தின் ஆரம்பக் காலக்கட்டத்தில் சமூகத்தை வழிநடத்தியவர்கள் பெண்கள்தான். அந்த பெண்வழி சமூகத்தில்தான் இன்றைய பெண்கடவுள்கள் தோன்றின.

கருவறை முதல் கல்லறை வரை ஒவ்வொரு மனிதரின் வெற்றிக்குப் பின்புலத்திலும் பெண்ணின் பங்கு உண்டு என்பது உலகறிந்த உண்மை. சமூகத்திலே பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு வித்திடுபவர்கள் பெண்கள் என்பதற்கு எவ்வித ஐயமுமில்லை.

இவ்வாறு வளர்ச்சிப் பாதையில் சமுதாயத்தை இட்டுச் செல்லும் பெண்கள் பாதுகாப்போடு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், நடைமுறையில் நாம் காண்பதோ நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. சீரும், சிறப்போடும் நடத்தப்பட வேண்டிய பெண்கள் பல்வேறு வகையான வன்முறைகளுக்கு இலக்காவது கொடுமையானது.

ஆணாதிக்க சமூக கட்டமைப்புகளில் சிக்கி, ஆண்களின் ஆதிக்க சூழ்ச்சிகளால் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள். இவ்வுலகிலே ஏற்படும் எவ்வித பிரச்சினையாக இருந்தாலும் அதில் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் பெண்களும், குழந்தைகளுமே.

பெண்களின் நிலையை சற்று ஆராய்ந்து பார்த்தால் எந்த அளவுக்கு அவர்கள் சமுதாயத்திலே பல வகையான வன்முறைகளால் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரியும். 15 முதல் 45 வயதான பெண்களுள் மூன்றில் ஒரு பங்கினர் ஏதாவது ஒரு வகையான வன்முறைக்கு ஆளாகுகின்றனர்.

ஒட்டு மொத்த பெண்களில் 35% பேர் உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர். திருமணமான பெண்களில் 46% பேர் பல்வேறு வகையான வன்முறைகளால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வைத் தொடருகின்றனர்.