தமிழ்த் திரையுலகின் முன்னணி ஹீரோக்களின் பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகவிருக்கும் 2012-ஆம் வருடத்தின் தீபாவளி பண்டிகையன்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது போல பெரிய நடிகர்களின் படங்களுக்குள் மிகப்பெரிய போட்டி இல்லை. அஜித்குமாரின் பில்லா-2 மட்டுமே இப்போது ரிலீஸாகி உள்ள நிலையில், ரஜினி, கமல், விஜய், சூர்யா, சிம்பு, கார்த்தி என வரிசையாக பல ஹீரோக்களின் படங்கள் மீதமிருக்கிறது. 2012-ஆம் ஆண்டு முடிய இன்னும் 3 மாதங்களே மீதமுள்ள நிலையிலும் மற்ற ஹீரோக்களின் படங்களின் வசூலில் பாதிப்பில்லாதது போல படங்கள் ரிலீஸாகின்றன.
ரஜினி-கமலின், கோச்சடையான்-விஸ்வரூபம் படங்கள் ஒரே சமயத்தில் ரிலீஸாகுமா என்ற கேள்வியை விட விஜய்-சூர்யாவின் துப்பாக்கி-மாற்றான் ஒரே சமயத்தில் ரிலீஸாகுமா என்ற எதிர்பார்ப்பு தான் அதிகமாகியிருந்தது. கடந்த வருடமும்(2011) விஜய்-சூர்யாவின், வேலாயுதம்-ஏழாம் அறிவு ஒரே நாளில் ரிலீஸாயின. துப்பாக்கி-மாற்றான் படங்களுக்கு பொதுவாக இருப்பது ஹீரோயின் மட்டுமே. நடிகை காஜல் அகர்வாலின் கால்ஷீட் பிரச்சினையால் தான் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் தள்ளிப்போனது ஒரு வழியாக கால்ஷீட் பிரச்சினையும் தீர்ந்து படப்பிடிப்பு முடியும் தருவாயில் துப்பாக்கி படத்தின் டைட்டில் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து படத்தின் ரிலீஸை பல நாட்கள் தள்ளிப்போட்டது.
வருகின்ற செப்டம்பர் 10-ஆம் தேதி வரப்போகும் வழக்கின் தீர்ப்பிற்காக காத்திருக்கிறது துப்பாக்கி படக்குழு. வழக்கு ஒருபுறம் இருந்தாலும் எப்படியும் தீபாவளியன்று விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிக்கொண்டிருக்கும் படத்தை வேறு பெயரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருக்கின்றது துப்பாக்கி யூனிட். மாற்றான் படக்குழு படப்பிடிப்பை விரைவில் முடித்திருந்தாலும் தீபாவளியன்று தான் மாற்றான் படம் ரிலீஸ் என்ற செய்தியே சினிமா வட்டாரத்தில் உலா வந்தது.
ஆனால் தற்போதைய தகவலின்படி மாற்றான் அக்டோபர் மாதமே ரிலீஸாகிறதாம். மாற்றான் படத்தை அக்டோபர் மாதமே ரிலீஸ் செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி எழும் முன்னரே, அதற்கு பதிலாக சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் ’அலெக்ஸ் பாண்டியன்’ படம் தீபாவளியன்று ரிலீஸாகிறது என்ற செய்தி வெளிவந்துள்ளது. அலெக்ஸ் பாண்டியன் படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறதாம். சிம்புவின் ‘வாலு’ படம் தீபாவளி ரிலீஸ் என்று போஸ்டர் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கார்த்தி நடிக்கும் படம், விஜய் நடிக்கும் படத்துடன் வெளிவருகிறது என்பதை விட, சூர்யா நடிக்கும் மாற்றான் ரிலீஸாகும் போது விஸ்வரூபம் படமும் ரிலீஸாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. ரஜினி நடிக்கும் கோச்சடையான் மட்டும் தான் சிங்கிளாக அவரது பிறந்தநாளான 12-12-12 அன்று ரிலீஸாகிறது.