ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மாரந்தை கிராமத்தை சேர்ந்தவர் ஊமைத்துரை (வயது 40). வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
அதன்பின்னர் ஊமைத்துரை சண்முகாபுரத்தை சேர்ந்த சண்முகத்தாய் (28) என்பரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய ஊமைத்துரை மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்தார். அதன் காரணமாக கணவன்- மனைவி இருவரும் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஊமைத்துரை கீழச்செல்லவனூரை சேர்ந்த சாத்தார் என்பவது மகள் நாகஜோதியை 3-வது திருமணம் செய்ய முடிவு செய்தார். நேற்று உத்திரகோசமங்கை கோவிலில் திருமணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சண்முகத்தாய், கீழக்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது கணவர் 3-வது திருமணம் செய்ய உள்ளார். அதை தடுத்து நிறுத்த வேண்டும், என்றார்.
உடனே போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் மணக்கோலத்தில் இருந்த ஊமைத்துரை-நாகஜோதி ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அவர்கள் சாயல்குடி அருகே உள்ள ஒரு கோவிலில் போலீசுக்கு தெரியாமல் 3-வது திருமணம் செய்து கொண்டனர்.
தலைமறைவாகிவிட்ட புதுமண தம்பதியை போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் காளிராஜ் கூறும்போது போலீசை ஏமாற்றி 3-வது திருமணம் செய்த ஊமைத்துரை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திருமணத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.