Sunday, 13 November 2011
சிமென்ட் விலை அரசு கவனம் தேவை!
2009ல், சிமென்ட் விலை, 140 - 150 ரூபாயாக இருந்தது. கடந்த ஆட்சியாளர்களுக்கு கணிசமானத் தொகையை சிமென்ட் ஆலை உரிமையாளர்கள், கப்பமாக தனிப்பட்ட முறையில் கட்டினர். விளைவு, 2010ல் சிமென்ட் விலை, 250 - 260 ரூபாய் வரை உயர்த்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. தற்போது, ஒரு மூட்டை சிமென்ட் விலை, 295 - 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது.மணல் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆட்சி மாற்றத்தால், தங்களின் தொழிலில் எந்த மலர்ச்சியும், மாற்றமும் ஏற்படவில்லை என்று, கட்டுமானத் தொழில் செய்வோர் கூறுகின்றனர்.சில சிமென்ட் ஆலை அதிபர்கள் ஓட்டளிப்பதால், ஆட்சி மாற்றம் நிகழ்வதில்லை. லட்சக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் ஏமாற்றத்தை ஓட்டுச்சாவடியில் வெளிப்படுத்தியதால், ஆட்சி மாற்றம் நிகழ்கிறது. இதை, தற்போதைய ஆட்சியாளர்கள் உணர்ந்து நடந்து, கட்டுமானத் தொழில் புத்துயிர் பெற வழிவகுக்க வேண்டும்."சிமென்ட் விலையைக் கேட்டால், எங்களுக்கு வீடு கட்டும் ஆசையே போய் விட்டது; கம்பி விலையைக் கேட்டதால், கனவில் கூட வீடு கட்டும் ஆசை வரவில்லை; மணல் விலை, எங்களுடைய மனதிலிருந்த சொந்த வீடு ஆசையைத் துடைத்தெறிந்து, மண்ணோடு மண்ணாக்கி விட்டது' என, நடுத்தர மக்கள் புலம்புகின்றனர்.கான்கிரீட் வீடு கட்டித்தரும் திட்டம், தி.மு.க.,வை ஆட்சியில் நிலைக்க உதவவில்லை. எனவே, தமிழக அரசு பசுமைக்குடில் திட்டத்தில், வேகம் காட்டாமல், கட்டுமானப் பொருட்கள் விலை குறைப்பில், அதீத கவனம் செலுத்தினால், லோக்சபா தேர்தலிலும் மக்கள் ஆதரவு தொடரும்.