
பாகிஸ்தானில் அமெரிக்கா தாக்குதல் 6 தலிபான் தீவிரவாதிகள் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தானில் மிரன்ஷா நகருக்கு அருகே உள்ள ஒரு கட்டிடத்தை குறிவைத்து அமெரிக்க படையினர், நேற்று உளவு விமானம் மூலம் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், சிலர் காயமடைந்ததாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
பழங்குடியினத்தவர் வசிக்கும் இப்பகுதி தலிபான் மற்றும் அல்கய்தா தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக விளங்குகிறது. கடந்த 2009ல் பராக் ஒபாமா அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல், இப்பகுதியில் தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குவது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 100க்கு மேற்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை 60 தடவை தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நியூஜெர்சி சட்டசபைக்கு இந்தியர் 6வது முறையாக தேர்வு
நியூஜெர்சி: அமெரிக்காவின் நியூஜெர்சி மாநில சட்டசபை துணை சபாநாயகராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உபேந்திரா ஜெ.சிவுகுலா (60) இருந்து வந்தார். இவர் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தொடர்ந்து 6 வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்.
120 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சட்டமன்றத்தில் தெற்காசியாவைச் சேர்ந்த ஒரே உறுப்பினர் சிவுகுலா என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தில் 17வது மாவட்டத்திலிருந்து அண்மையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 60 சதவீத ஓட்டுகளை பெற்றார். ஆந்திர பிரதேச மாநிலம், நெல்லூரில் பிறந்த இவர் கடந்த 1974ல் அமெரிக்காவில் குடியேறினார். எலக்ட்ரிகல் என்ஜினியரிங் பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.
பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி இங்கிலாந்தில் 4 இளைஞர்கள் கைது
லண்டன்: பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் 4 இளைஞர்களை இங்கிலாந்து போலீசார் கைது செய்துள்ளனர். இங்கிலாந்தில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் அந்நாட்டு போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பர்மிங்காம் நகரின் ஸ்பார்க்ஹில் பகுதியில் போலீசார் ஒரு தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினர். அப்போது இங்கிலாந்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த பாகிஸ்தான் சென்று பயிற்சி பெற்றது,
தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் தீவிரவாத தொடர்பு குறித்து 48 மணி நேரம் விசாரணை நடந்தது. அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை போலீசார் வெளியிடவில்லை. இவர்களால் நாட்டு பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்று உயரதிகாரிகள் தெரிவித்தனர்.