சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு காந்தி வேடத்தில் வந்து ஆட்டோ டிரைவர் ஒருவர் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். அவரது பெயர் சக்திவேல். அவருக்கு, மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர், ஏற்கனவே அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டார். போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு குடும்பத்தோடு தற்கொலை முயற்சியிலும் இறங்கினார்.
இந்த நிலையில், நேற்று மகாத்மா காந்தி வேடத்தில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குள் புகுந்துவிட்டார். வேட்டி துண்டு மட்டும் அணிந்திருந்தார். முகத்தில் கண்ணாடி அணிந்தும், கையில் தடியுடனும் அவர் வந்தார்.
காந்தியின் ஆவி தனது உடலில் புகுந்துவிட்டது என்றும், அன்னா ஹசாரேவை சந்திக்கப்போவதாகவும், இந்தியாவின் அடுத்த பிரதமர் நான்தான் என்றும் வேடிக்கையாக பேசினார். புதிய கட்சி தொடங்கப்போவதாகவும், இதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். பின்னர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.