அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர்ந்துள்ள ஆபரேட்டர்கள், பொது மக்களிடம் இருந்து மாதக் கட்டணமாக ரூ.70-க்கு மேல் வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் பதிவு செய்து அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களாகப் பலரும் தொழில் செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் தங்களுடைய சந்தாதாரர்களிடம் இருந்து வசூலித்த மூன்று மாத முன்பணமும் மற்றும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கான சந்தா தொகையையும் விரைவில் செலுத்த வேண்டும்.
சந்தாதாரர்களிடம் இருந்து வசூலித்த தொகையை தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்குச் செலுத்தாமல் தாமதம் செய்துவரும் ஆபரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சந்தாத தொகையைச் செலுத்தாத ஆபரேட்டர்களின் பதிவு ரத்து செய்யப்படுவதுடன் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். பதிவு ரத்து செய்யப்படும் நேரத்தில் அவர்களுக்குப் பதிலாக அந்தப் பகுதியில் புதிய ஆபரேட்டர்கள் நியமனம் செய்யப்படுவர்.
கட்டணம்: அரசு நிர்ணயித்த தொகையான ரூ.70-க்கு மேல் சந்தாதாரர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது. அவ்வாறு வசூலிப்பது தெரிய வந்தால், அத்தகைய ஆபரேட்டர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.