Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday 15 September 2012

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏன் வருகிறது?

சிலருக்கு மட்டும் மார்பக புற்றுநோய் ஏன் வருகிறது? இதற்கு சரியான காரணம் தெரியவில்லை. சுற்றுச்சூழல் மற்றும் பரம்பரை காரணங்கள், இந்நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன. அவை:

* பன்னிரெண்டு வயதுக்குள்ளாகவே பருவம் எய்தி, 50 வயதுக்கும் மேலாக மாதவிடாய் ஏற்படுவது.

* ரத்த சம்பந்த உறவினர்களில் யாருக்காவது, மார்பகம் அல்லது கருப்பை வாய் புற்றுநோய் இருப்பது. இந்த வகையில், பி.ஆர்.ஏ.சி., 1, 2 மற்றும் 3 ஆகிய மரபணுக்கள் புற்றுநோய் ஏற்பட காரணமாக அமைகின்றன என்று, கண்டறியப்பட்டுள்ளது.

* கதிரியக்கத்தால் பாதிக்கப்படுவது.

* பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, கருத்தடை மாத்திரை சாப்பிடுவது அல்லது, மெனோபாஸ் பிரச்னைக் காக, “ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட்’ சிகிச்சையை நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்து கொள்வது.

* அதிக வயதுக்கு பின் மகப்பேறு அடைவது, அதை தொடர்ந்து ஓராண்டுக்கு தாய்ப்பால் கொடுக்காமை.

* அதிக உடல் பருமன்.

* மது அருந்துவது, அளவுக்கு அதிகமாக டீ, காபி, காற்றூட்டப்பட்ட குளிர்பானங்கள் அருந்துவது, புகை பிடிப்பது.

சுய பரிசோதனை மூலம், துவக்கநிலை மார்பகப் புற்றுநோயை கண்டறியலாம். இந்த பரிசோதனை மிக எளிதானது. இந்த பரிசோதனையில், ஐந்து நிலைகள் உள்ளன. ஒவ்வொரு மாதமும், ஒரே நாளில் இந்த பரிசோதனை மேற்கொண்டால், ஹார்மோன் மாற்றங்களால் உண்டாகும், குழப்பங்களை தவிர்க்கலாம்.

நிலை 1: கண்ணாடி முன் நின்று, கைகளை இடுப்பில் வைத்து கொண்டு, மார்பகங்களை உற்று நோக்குங்கள். மார்பகத்தின் அளவு, தோற்றம், நிறம் ஆகியவற்றில் ஏதாவது மாற்றம் தென்படுகிறதா என்பதை கண்காணியுங்கள். வீக்கம் இருக்கிறதா என்பதையும் கவனியுங்கள். மார்பகத்தில் குழி விழுதல், தோல் திடீரென சுருங்குதல், தோலில் திடீர் தடிமன் ஏற்படுதல், சிவப்பாகி போதல், உலர்ந்து போதல், வீக்கம், காயம் ஏற்பட்டது போன்ற தழும்பு, காம்பு இடம் பெயர்தல் ஆகியவற்றை கண்காணிப்பது.

நிலை 2: கைகளை மேலே உயர்த்தி, மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் தென்படுகிறதா என்று கண்காணித்தல்.

நிலை 3: காம்பை அழுத்தி பார்த்து, அதில் கசிவு ஏதும் ஏற்படுகிறதா என்பதை கண்காணித்தல்.

நிலை 4: இடதுபுறமாக படுத்து, வலது கையால், இடது மார்பகத்தின் அனைத்து பகுதியையும் மெலிதாக அழுத்தி, கட்டி ஏதும் தென்படுகிறதா, வலி இருக்கிறதா என்பதை பரிசோதிக்கவும். அதேபோல், வலது பக்கமாக படுத்து, இடது கையால், வலது மார்பகத்தை பரிசோதித்தல்.

நிலை 5: நிலை 4ல் குறிப்பிடப்பட்ட பரிசோதனையை, நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் செய்து பார்த்தல்.

இந்த பரிசோதனைகளை அடிக்கடி செய்து பார்க்க வேண்டும். நாற்பத்தைந்து வயதானதுமே, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, “மேமோகிராம்’ செய்வது அவசியம். சிறிய கட்டிக்கு கூட, தகுந்த மருத்துவரிடம் காண்பித்து, சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

தினமும் ஒரு மணி நேரம் ஓட்டப் பயிற்சி, நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை மேற்கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். கேன்சர் வராமல் பாதுகாக்க முடியும். துவக்க நிலை கேன்சரை சிகிச்சை மூலம், சரி செய்து விடலாம். முற்றிலும் குணமடைந்து, நீண்ட நாள் உயிர் வாழலாம்.